சுடச்சுட

    

    பலாத்காரம் செய்து சிறுமி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

    By DIN  |   Published on : 12th May 2017 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
    தண்டராம்பட்டு வட்டம், வானாபுரத்தை அடுத்த மழுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளி ரேணு. இவர், கூலித் தொழிலாளி. இவரது மனைவி முருகாயி, மகன் பாலாஜி (22), மகள் அஸ்வினி (12) ஆகியோருடன் பெங்களுரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
    அஸ்வினி பெங்களூரை அடுத்த மாண்டியா, கல்வாரி பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பாலாஜிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. எனவே, கடந்த 2016 ஜூன் மாதம் முருக்காயி தனது குடும்பத்தினருடன் மழுவம்பட்டு கிராமத்துக்கு வந்தார்.
    2016 ஜூன் 2-ஆம் தேதி ரேணு, தனது மகள் அஸ்வினியை அழைத்துக் கொண்டு விறகு சேகரிக்கச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பண்டரிநாதன் (40) எதிரே வந்தாராம். அஸ்வினியை மிளகாய் பறிக்க அனுப்பி வைக்குமாறு ரேணுவிடம் பண்டரிநாதன் கேட்டாராம்.
    பின்னர், ரேணுவை ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு, அஸ்வினியை மட்டும் பண்டரிநாதன் கரும்புத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. அப்போது, அஸ்வினி சப்தம் போட்டதால் அவரது கழுத்தை நெரித்து பண்டரிநாதன் கொன்றாராம். நீண்ட நேரமாகியும் அஸ்வினி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ரேணு, இதுகுறித்து ஊர் பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார்.
    பின்னர், பண்டரிநாதனை பொதுமக்கள் பிடித்து, வானாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், அஸ்வினியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதை அவர் ஒப்புக் கொண்டாராம். இதையடுத்து, கரும்புத் தோட்டத்தில் இருந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. பண்டரிநாதனை போலீஸார் கைது செய்தனர்.
    இந்த வழக்கு, திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மேரி ஆன்செலம், பண்டரிநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து, பண்டரிநாதனை போலீஸார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai