Enable Javscript for better performance
ராணுவ வீரரின் மனைவியைக் கொன்று 70 பவுன் நகைகள் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே வியாழக்கிழமை இரவு ராணுவ வீரரின் மனைவியைக் கொன்று 70 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    ஆரணியை அடுத்துள்ள கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரன் (40). ராணுவ வீரரான இவர், தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.
    இவரது மனைவி காந்தரூபி (38), மகன் சக்திவேல் (17) ஆகியோர் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் வசித்து வருகின்றனர். காந்தரூபி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், பிளஸ் 2 பயில உள்ள சக்திவேல், அதற்காக வியாழக்கிழமை மாலை சிறப்பு வகுப்புக்கு சென்றிருந்தார்.
    கீழ்அரசம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற வாரச் சந்தைக்கு காந்தரூபி சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீடு திரும்பினார். இரவு 9 மணியளவில் சக்திவேலும் சிறப்பு வகுப்பு முடிந்து வீடு திரும்பினார். எனினும், அவருக்கு அசதியாக இருந்ததால், வீட்டு வராண்டாவில் உள்ள கட்டிலில் ஓய்வு
    எடுத்துள்ளார்.
    தாய் சமையல் அறையில் இருப்பார் என்றும், சாப்பிடுவதற்காக தன்னை அழைப்பார் என்று நினைத்துக் கொண்டு காத்திருந்த சக்திவேல், இரவு 10 மணி வரை தாயிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் தாயைத் தேடி சமையல் அறைக்குச் சென்றார். அப்போது, வீட்டுக்குள் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்ததுடன், சமையல் அறையில் காந்தரூபி நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக்திவேல், உடனடியாக அருகே வசிக்கும் பெரியப்பா குமார் வீட்டுக்கு ஓடிச் சென்று தகவல் தெரிவித்தார்.
    அவர் தனது மனைவி சரளா மற்றும் உறவினர்களுடன்  வந்து பார்த்தார்.
    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆரணி டிஎஸ்பி ஜெரீனா பேகம் தலைமையில், காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளர்கள் ராஜா, மனோகரன், ரங்கநாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
    பின்னர், காந்தரூபியின் சடலத்தை பார்வையிட்டு போலீஸார் தடயங்களை சேகரித்தனர்.
    பின்னர், போலீஸார்
    கூறியதாவது: காந்தரூபியை கொலை செய்வதற்கு முன்பு அவரை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற காந்தரூபியின் தலையை சுவற்றில் முட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
    பின்னர், பீரோவில் இருந்த 70 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளனர். 3 அல்லது 4 நபர்கள் கூட்டாக சேர்ந்து இந்தக் கொலையை செய்திருக்கலாம். மேலும், காந்தரூபி வாரச் சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பிறகும், அவரது மகன் சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததற்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் கொலை நடந்துள்ளதால், இதில் உள்ளூர் நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக, போலீஸார் தெரிவித்தனர்.
    காந்தரூபி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததால், அது தொடர்பான பணத் தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இதுதொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, காந்தரூபியின் சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai