சுடச்சுட

    

    ஆரணி பகுதியில் வீதிகள்தோறும் நீதியின் பயணம் என்ற தலைப்பில் 12 இடங்களில் மாவட்ட  அமர்வு  நீதிபதி  தலைமையில் சட்ட விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைகள் குழு அறிவுறுத்தலின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட அமர்வு நீதிபதியுமான ஜி.மகிழேந்தி, திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்டச் செயலர் நீதிபதி ராம்மோகன், ஆரணி சார்பு நீதிபதி எழில்வேலன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இந்திராகாந்தி, ஆரணி வழக்குரைஞர் சங்கத் தலைவர் வி.வெங்கடேசன், வழக்குரைஞர்கள் எஸ்.தனஞ்செழியன், சிகாமணி, கே.ஆர்.ராஜன், திருஞானம் உள்ளிட்ட வழக்குரைஞர்களைக் கொண்ட குழுவினர் பேரணியாகச் சென்றனர்.
    ஆரணி பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை, ஆரணிப்பாளையம் தர்மராஜா கோயில், சேவூர் பேருந்து நிறுத்தம், இராட்டிணமங்கலம் மந்தைவெளி பகுதி, குண்ணத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனைப் பிரசாரத்திலும் ஈடுபட்டனர்.
    இதைத் தொடர்ந்து, ஆரணி ஊராட்சி ஒன்றியம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மகளிர் சுயஉதவிக்குழுவினரைச் சந்தித்தனர்.
    அப்போது, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தங்களுக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் பெறவும், கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் எடுக்கவும், கிரிமினல் வழக்கு நடத்தவும், சொத்துரிமை மற்றும் வாடகை பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு நடத்தவும் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும், இராட்டிணமங்கலம், எஸ்.வி.நகரம் கிராமங்களில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்றக் கோரி, நீதிபதியிடம் பெண்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதேபோல, பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதைத் தொடர்ந்து, ஆரணி கோட்டை மைதானத்தில் உள்ள கார்க்கில் போர் நினைவுத்தூணுக்கு மாவட்ட அமர்வு நீதிபதி மகிழேந்தி, மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai