சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை ஊராட்சிக்கு உள்பட்டது கோசாலை கிராமம். இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
    குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். எனவே, சில நாள்களுக்கு முன்பு திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அப்போது, அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். எனினும், குடிநீர்ப் பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை எனத் தெரிகிறது.
    இந்நிலையில், சனிக்கிழமை மீண்டும் கோசாலை பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் காலிக் குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸார் மற்றும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த முறை கண்டிப்பாக குடிநீர் வழங்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
    இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai