Enable Javscript for better performance
சேத்துப்பட்டு கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டு கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 14th May 2017 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேத்துப்பட்டில் முகமாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழாவின்போது ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை விடுவிக்கக் கோரி, விழாக் குழுவினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சேத்துப்பட்டில் சேத்துப்பட்டு - பழம்பேட்டை சாலையில் உள்ள முகமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. பிற்பகல் மேளதாளம், பேண்ட் வாத்தியத்துடன் கரக ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, சசி, சுரேஷ், கார்த்தி உள்பட 20 பேர் பேண்ட் வாத்தியம் வாசிப்பவர்களிடம் தகராறு செய்தனராம். இதனை விழாக் குழுவைச் சேர்ந்த பூபாலன் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர், கரகம் கோயிலுக்கு வந்தபோது மீண்டும் ஏழுமலை பிரிவைச் சேர்ந்தவர்கள் உருட்டுக் கட்டையுடன் சென்று தகராறு செய்தனராம்.
    இதுகுறித்து ஏழுமலை தரப்பினர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் விழாக் குழுவைச் சேர்ந்த கமல் என்பவரை வெள்ளிக்கிழமை இரவு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கமல் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார்.
    இந்நிலையில், விழாக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி, தகராறு செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமல், விழாக் குழுவைச் சேர்ந்தவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறியும், அதனைக் கண்டித்தும் சனிக்கிழமை காலை வீதியுலா வந்த சாமியுடன் ஒரு மணி நேரம் கோயில் முன் 150-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விழாக் குழுவினரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கமலை விடுவிக்க வேண்டும் எனவும், தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    இதனிடையே, கமலின் தம்பி திருமலை, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரது தந்தை பூங்காவனம், சாலை மறியலின்போது நின்றிருந்த லாரி மீது ஏரி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனிருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.
    இதைத் தொடர்ந்து, தகராறு செய்தவர்கள் மீது புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுப்படும் என போலீஸார் கூறியதுடன், கமலை விடுவித்தனர். பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட விழாக் குழுவினர் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai