சுடச்சுட

    

    குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டுப் போட்ட பொதுமக்கள்

    By DIN  |   Published on : 15th May 2017 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, ஊராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலையை அடுத்த மேல்கச்சிராப்பட்டு கிராமத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், 15 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
    அண்மைக்காலமாக ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால், பொதுமக்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
    இதையடுத்து, குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மேல்கச்சிராப்பட்டு ஊராட்சி அலுவலகம் எதிரே திரண்டனர். பின்னர், ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் தச்சம்பட்டு போலீஸார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத்தில் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனவும், அதுவரை தினமும் 3 லாரிகளில் தண்ணீர் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, அலுவலகத்துக்கு போடப்பட்ட பூட்டின் சாவியை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai