சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 90 சதவீதப் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி

    By DIN  |   Published on : 15th May 2017 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே 90 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனைகளுக்கு எடுத்துச்
    செல்லப்பட்டன.
    இதனால், விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வந்த பயணிகள் பேருந்து இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (மே 15) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
    ஆனால், ஒரு நாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதலே போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை தொடங்கி விட்டனர். பிற்பகல் 2 மணி முதல் திருவண்ணாமலை, போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதி பேருந்து நிலையங்களில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு அந்தந்தப் பகுதி பணிமனைகளுக்கு பேருந்துகள் கொண்டு செல்லப்பட்டன.
    சென்னை பயணிகள் கடும் அவதி: திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் மாலை 4 மணி முதல் சென்னைக்கு ஒரு அரசுப் பேருந்து கூட இயக்கப்படவில்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை பேருந்துகள் இல்லாததால் சென்னை பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
    மாறாக, திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் எல்லாம் சென்னைக்கு இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
    90 சதவீதப் பேருந்துகள் நிறுத்தம்: மாலை 6 மணி முதல் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் பேருந்துகள் இல்லாமல் வெறிச்சோடியது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளில் 90 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நீண்ட தொலைவு வெளியூர்களுக்கு செல்ல வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
    ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்: வேறு வழியில்லாமல் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் பலர் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்தனர். பின்னர், அந்த வழியே விழுப்புரம், காட்பாடி நோக்கிச் சென்ற ரயில்களில் பயணிகள் பயணித்தனர். மேலும், தனியார் பேருந்து நிறுவன அலுவலகங்களில் ஏராளமானோர் குவிந்து முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இதனால் கூடுதலாக தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.
    தொழிற்சங்கத்தினர் மோதல்: திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் திரண்டு பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என்று துண்டுப் பிரசுரங்களை பேருந்துகளில் ஓட்டினர். தொமுச நிர்வாகிகள் பேருந்துகள் இயங்காது என்று துண்டுப் பிரசுரங்களை ஓட்டினர்.
    ஒரு கட்டத்தில் ஒரு தொழிற்சங்கத்தினர் ஒட்டிய துண்டுப் பிரசுரங்களை மற்றொரு தொழிற்சங்கத்தினர் கிழித்து எரிந்தனர். இதைக் கண்டித்து தொமுசவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆரணி: இதேபோல, ஆரணியில் பேருந்துகளை அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் இயக்காமல் இருப்பதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளை தடுத்து நிறுத்தி, பணிமனைக்கு எடுத்துச் செல்லுமாறு தெரிவித்தனர்.
    தகவலறிந்த அதிமுக முக்கிய பிரமுகர்கள் க.சங்கர், பாரிபாபு, கஜேந்திரன், குமரன், உதயக்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்துக்குச் சென்று பேருந்துகளை தடுத்து நிறுத்திக்கொண்டிருந்த தொழிற்சங்க நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் இருதரப்பையும் சமரசம் செய்து கலைந்துபோகச் செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai