Enable Javscript for better performance
மதுக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே செட்டிக்குளம் கிராமத்தில் மதுக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தெள்ளாறு - தேசூர் சாலையில் உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையை அகற்றக் கோரி, அந்தப் பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மதுக் கடையை முற்றுகையிட்டனர். பின்னர், மதுக் கடை அருகில் காலி மதுபாட்டில்களை தெள்ளாறு - தேசூர் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இந்த மதுக் கடை அமைக்கப்படும்போதே நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆனால், எங்கள் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் இந்த மதுக் கடையை திறந்தனர்.
    இந்த மதுக் கடையினால் எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் நிம்மதியாக வயல் வேலைக்கு செல்ல முடிவதில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகளும் இந்த வழியாகச் செல்ல முடிவதில்லை. அவர்கள் கேலி, கிண்டலுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே, இந்த மதுக் கடையை உடனடியாக அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
    பின்னர், தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.முருகன் மற்றும் தெள்ளாறு போலீஸார், மதுக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததன்பேரில், பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் தெள்ளாறு - தேசூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai