சுடச்சுட

  

  வந்தவாசியில் வீதிகள்தோறும் நீதியின் பயணம் நிகழ்ச்சி: மாவட்ட நீதிபதி பங்கேற்பு

  By DIN  |   Published on : 15th May 2017 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வந்தவாசி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வீதிகள்தோறும் நீதியின் பயணம் நிகழ்ச்சி வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஜி.மகிழேந்தி தலைமை வகித்தார். வந்தவாசி தேரடியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த அவர், அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாகச் சென்று சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர், வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
  பொதுமக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த வீதிகள்தோறும் நீதியின் பயணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் பயணம் வரும் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறுகிறது. இந்தப் பயணத்தின்போது நடைபெறும் சட்ட விழிப்புணர்வு முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  போளூர் பகுதியில் நடைபெற்ற பயணத்தின்போது, வடமாதிமங்கலம் கிராமத்தில் கிராமசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் மதுக் கடை அகற்றப்படவில்லை என்று பொதுமக்கள் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, அந்த மதுக் கடை மூடப்பட்டது.
  மேலும், ஆரணியில் நடைபெற்ற பயணத்தின்போது, ஆரணி மகளிர் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரில் ஆபாச திரைப்பட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தனர். இதையடுத்து, அந்த சுவரொட்டிகளை அகற்றிவிட்டு சுவரில் திருக்குறள்கள் எழுதும்படி உத்தரவிடப்பட்டது. எனவே, இதுபோன்ற சட்ட விழிப்புணர்வு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பின்னர், பொதுமக்களிடமிருந்து அவர் மனுக்களை பெற்றார்.
  வந்தவாசி மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் கா.நிலவரசன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி, செய்யாறு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெய்சங்கர், காவல் துணைக் கண்காணிப்பாளர் பொற்செழியன், வந்தவாசி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் வெங்கடேசன், வழக்குரைஞர்கள் டி.ஜி.எழிலரசன், சா.இரா.மணி, நேதாஜி, நவாப்ஜான், ரமேஷ், பிரகாஷ், அரசு வழக்குரைஞர் எல்.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai