Enable Javscript for better performance
கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கோரி தெள்ளாறில் கடையடைப்புப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கோரி தெள்ளாறில் கடையடைப்புப் போராட்டம்

    By DIN  |   Published on : 18th May 2017 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசியை அடுத்த தெள்ளாறில் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்கக் கோரி, புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
    தெள்ளாறு காலனியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வந்தவாசி பகுதியில் தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த 19 மதுக் கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன.
    இதன் காரணமாக, தெள்ளாறு காலனியில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது. இதனால் தெள்ளாறு காலனிக்கு கள்ளச்சாராயம் அருந்த வருவோரின் எண்ணிக்கை அதிகமானதால், அந்தக் காலனி மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
    இதையடுத்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கோரி, கடந்த 6-ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெள்ளாறு காவல் நிலையம் முன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், கள்ளச்சாராய விற்பனை எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து நடந்து வந்தது.
    இந்நிலையில், தெள்ளாறில் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்கக் கோரி, புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. தெள்ளாறு அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை சார்பில் இந்தப் போராட்டம் நடந்தது.
    போராட்டத்தை ஒட்டி, பஜார் வீதி, வட்டார வளர்ச்சி அலுவலகம்  உள்பட அனைத்துப் பகுதிகளிலும் முழுவதுமாக கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்களும் இயங்கவில்லை.
    இதையொட்டி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜேந்திரன், வந்தவாசி டிஎஸ்பி பொற்செழியன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி சில இளைஞர்கள் கடைகளின் மீது அனுமதியின்றி கருப்புக்கொடிகளை கட்டியதாகக் கூறி, இளைஞர்கள் 20 பேரை போலீஸார் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
    இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இளைஞர்களை விடுவிக்கும்படி போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, இளைஞர்களை போலீஸார்
    விடுவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai