சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை மாலை திடீரென மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
  திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கடும் அனல் காற்று வீசி வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
  இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, வேட்டவலம், போளூர், கலசப்பாக்கம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்தது.
  திருவண்ணாமலையில் பலத்த மழை: திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியர் அலுவலகம், அடி அண்ணாமலை, கிரிவலப்பாதை பகுதிகளில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை லேசான மழை விட்டு, விட்டு பெய்தது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை சுமார் 1 மணி நேரம் சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
  மின்சாரம் துண்டிப்பு: தொடர்ந்து, இரவு 8 மணி வரை மழை பெய்து கொண்டே இருந்தது. இதனிடையே இரவு 7 மணி முதல் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான வீடுகள் இருளில் மூழ்கின.
  குளிர் காற்று வீசியதால் மகிழ்ச்சி: இந்த திடீர் மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல, நகரப் பகுதி மக்கள் நீண்ட நாள்களுக்குப் பிறகு குளிர் காற்று வீசியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
  போக்குவரத்து பாதிப்பு: வேட்டவலம், ஆவூர் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் 2 மரங்கள் திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையின் குறுக்கே விழுந்தன.
  இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட வரிசையில் அரசுப் பேருந்துகள், லாரிகள் நின்றதால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai