Enable Javscript for better performance
கரும்புப் பயிர் வறட்சி மேலாண்மை பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி அருகே உள்ள கிராமங்களில் கரும்புப் பயிர் வறட்சி மேலாண்மை முறைகள் குறித்து ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில், விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஆரணியை அடுத்த சேவூர், செட்டித்தாங்கல், சிறுமூர் உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் கரும்புப் பயிர் அதிகமாக பயிரிடப்பட்டு, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்பப்படுகிறது. இந்தப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கரும்புப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது.
    இந்நிலையில், வறட்சியில் இருந்து கரும்புப் பயிரை காப்பாற்றும் விதமாக வறட்சி மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
    அப்போது, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு அதிகாரி மு.வேலாயுதம் கூறியதாவது:
    தற்போது நிலவி வரும் வறட்சியில் இருந்து கரும்புப் பயிரை காப்பாற்றும் வகையில், 5 முதல் 6 மாத கரும்புப் பயிரின் அடிப்பாகத்திலிருந்து காய்ந்த சோகையை உரித்து, அப்படியே பார்களின் மேல்பாகத்தில் வேர் பகுதியில் சோகையை பரப்பிவிட வேண்டும்.
    பின்பு, நீர்ப்பாசனம் செய்தால், மண்ணின் ஈரத்தன்மை பாதுகாக்கப்பட்டு, நீர் ஆவியாகாமல் தடுக்கப்படும். இதனால் கரும்பு காயாமல் பசுமையாக இருக்கும். மேலும், சோகையை உரிப்பதால், கரும்புப் பயிரை தண்டு புழுக்கள், மாவுப்பூச்சிகள், செதில் பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கலாம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai