சுடச்சுட

  

  செய்யாறு அருகே மேனல்லூர் கிராமத்தில் மதுக் கடையைத் திறக்க விடாமல், அந்தக் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  மேனல்லூர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறதாம். இங்கு மது அருந்துவோரால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாகக் கூறியும், இந்தக் கடையை மூடக் கோரியும் அந்தப் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் கடையின் மேற்பார்வையாளர் ரங்கநாதன், விற்பனையாளர்கள் அருள்தாஸ், தண்டபாணி, பாபு ஆகியோர் மதுக் கடையை திறக்கச் சென்றனர். அப்போது, கடை முன் கூடியிருந்த ஏராளமான பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கடையை மூடக் கோரி, திறக்க விடாமல் முழக்கங்களை எழுப்பியவாறு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  தகவலறிந்து வந்த தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் அசோக்குமார், சுகுமார், தனபால், மது விலக்கு கலால் வருவாய் ஆய்வாளர் நீலகண்டன் மற்றும் போலீஸார், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  மேலும், கடையை மூடக் கோரி தற்போது வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் மனு அளியுங்கள், அந்த மனுவின் அடிப்படையில் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
  இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக மதுக் கடை திறக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai