சுடச்சுட

  

  ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 3 டன் மாம்பழங்கள், வாழைப்பழங்கள் பறிமுதல்

  By DIN  |   Published on : 25th May 2017 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செய்யாறில் கார்பைடு கல் வைத்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 3 டன் அளவிலான மாம்பழங்கள்,  வாழைப்பழங்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர்.
  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செய்யாறு கே.சீனிவாசன், ஆரணி கிழக்கு பி.எம்.ரவி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஆல்பர்ட் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என செய்யாறு பேருந்து நிலையம், சந்தை, ஆரணி கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
  ஆய்வின்போது, சுமார் 30 கிலோ அளவிலான புகையிலைப் பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், 50 மைக்ரான் அளவுக்கும் குறைவான சுமார் 100 கிலோ அளவிலான நெகிழிப் பைகளை (பிளாஸ்டிக் கேரி பேக்) பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பலகாரக் கடைகளில் அதிகளவில் வண்ண பவுடர் கலந்திருந்த இனிப்பு, கார வகைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
  பின்னர், செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பழ மண்டியில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள், அங்கு கார்பைடு கல் வைத்தும், இ 50 என்ற வேதிப் பொருள் மூலமும் பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 3 டன் அளவிலான மாம்பழம், வாழைப்பழங்களை பறிமுதல் செய்தனர்.
  பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள், புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அழித்தனர். மேலும், தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடைக்காரர்களிடம் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai