சுடச்சுட

  

  திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. ஒரு கோடியில் சிறுநீரக குருதி பகுப்பாய்வுப் பிரிவு தொடக்கம்

  By DIN  |   Published on : 26th May 2017 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. ஒரு கோடி மதிப்பில் 12 நவீன இயந்திரங்களுடன் கூடிய புதிய சிறு நீரக குருதி பகுப்பாய்வுப் பிரிவை (டயாலஸிஸ்) சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
  திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சிறுநீரக குருதி பகுப்பாய்வு பிரிவு (டயாலஸிஸ்) தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார்.
  முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏக்கள் வி.பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), தூசி கே.மோகன் (செய்யாறு), முன்னாள் வணிகவரி ஆலோசனைக் குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெயந்தி வரவேற்றார்.
  சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் ரூ. ஒரு கோடியில் 12 நவீன இயந்திரங்களுடன் அமைக்கப்பட்ட புதிய சிறுநீரக குருதி பகுப்பாய்வு பிரிவைத் தொடக்கி வைத்துப் பேசினர்.
  பின்னர், செய்தியாளர்களுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறுநீரக குருதி பகுப்பாய்வுப் பிரிவில் 12 நவீன சிறுநீரக குருதி பகுப்பாய்வு இயந்திரங்கள் உள்ளன. இந்தப் பிரிவுக்கு மட்டும் பயிற்சி பெற்ற 4 உதவி மருத்துவர்கள், 9 செவிலியர்கள், 2 டயாலஸிஸ் தொழில்நுட்புனர்கள் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு இந்த மையம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
  திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டேன். அதன்படி, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.3.67 கோடியில் துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள சேரியந்தல் ஏரியில் 4 திறந்தவெளி கிணறுகள் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
  தமிழகத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,464 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  இந்த சிகிச்சை தற்போது சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது. தஞ்சாவூரில் விரைவில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டும். பின்னர், அனைத்து நகரங்களிலும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றார்.
  நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai