Enable Javscript for better performance
திருவண்ணாமலை, போளூரில் 5-ஆவது நாளாக ஜமாபந்தி: 147 பேருக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை, போளூரில் 5-ஆவது நாளாக ஜமாபந்தி: 147 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

    By DIN  |   Published on : 26th May 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை, போளூர் பகுதிகளில் 5-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 147 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    திருவண்ணாமலை வட்டத்துக்கான ஜமாபந்தி கடந்த 19-ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இங்கு தொடர்ந்து 5-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்திக்கு வட்டாட்சியர் ஆர்.ரவி தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். துரிஞ்சாபுரம் மண்டல துணை வட்டாட்சியர் அமுல் வரவேற்றார்.
    மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், ஜமாபந்தி அலுவலருமான ப.சுப்பிரமணியன், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார்.
    மேலும், தச்சம்பட்டு உள் வட்டத்துக்கு உள்பட்ட நவம்பட்டு, பெரிய கல்லப்பாடி, பெருமணம், தேவனூர், ஆருத்திராப்பட்டு, பனையூர் மற்றும் மங்கலம் உள் வட்டத்துக்கு உள்பட்ட வள்ளிவாகை, தெள்ளானந்தல், குன்னியந்தல், துர்க்கை நம்மியந்தல், கிளியாப்பட்டு, வடஆண்டாப்பட்டு, குண்ணுமுறிஞ்சி, ஆர்ப்பாக்கம், நூக்காம்பாடி, வி.நம்மியந்தல், ராந்தம், மங்கலம், பாலானந்தல் உள்ளிட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.
    பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 417 மனுக்களில், 45 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    இதில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆர்.செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் பார்த்தசாரதி, தலைமை நில அளவர் ஆர்.வரதராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    போளூர்: இதேபோல, போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 5-ஆம் நாளாக வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி தலைமை வகித்து, மொடையூர் பிர்காவைச் சேர்ந்த மொடையூர், அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம், ராந்தம், பெலாசூர், கரைப்பூண்டி உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த 233 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
    பின்னர், 102 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி வழங்கினார். வட்டாட்சியர் புவனேஸ்வரி, சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் தேவேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் வைதேகி, தலைமையிடத்து வட்டாட்சியர் குப்புசாமி, வருவாய் ஆய்வாளர்கள் ஸ்ரீரஞ்சனி, கோமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் கௌதமி, மணிகண்டன், சரவணன் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai