சுடச்சுட

  

  முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால் தொடக்கி வைக்கப்பட்ட செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (மே 29,30) பொன்விழா கொண்டாடப்படுகிறது.
  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி. செய்யாறு வட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புக்கானத் தேவைகளை நிறைவு செய்வதற்காக ஒருங்கிணைந்த வடஆற்காடு மாவட்டமாக இருந்தபோது, அப்போதைய சட்டப் பேரவைத் துணைத் தலைவர் புலவர் கா.கோவிந்தனின் முயற்சியாலும், அப்போதைய மாவட்ட ஆட்சியர் பி.எம்.பெல்லியப்பா மேற்பார்வையில், பொதுமக்களின் நன்கொடையாலும் துணையோடுயும் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது.
  மிகக்குறுகிய காலத்தில் 15.6.1967 அன்று 69 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் அன்றைய தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை, 17.07.1967 அன்று முறைப்படி வகுப்புகளை தொடக்கி வைத்தார்.
  அதிகளவில் மாணவிகள்: புதுமுக வகுப்புகளில் 5 பாடப் பிரிவிகளில் 160 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, இன்று ஆலமரம்போல வளர்ந்து 13 துறைகளுடன், இளநிலை முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை கொண்டுள்ளது. இதில், தற்போது சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் அதிக அளவாக 2,800 மாணவிகள் (53 சதவீதம்) படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  சுழற்சி முறை: மாவட்டத் தலைநகரங்களில் உள்ள கல்லூரிகள் சுழற்சி முறை வகுப்புகளை கொண்டிராத நிலையில், ஊரகப் பகுதியில் அமைந்துள்ள செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் அனைத்துத் துறைகளிலும் சுழற்சி முறையாக காலை, மாலை என இருவேளை வகுப்புகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகின்றன.
  இந்தக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் பலர் உயர் நீதிமன்ற நீதிபதிளாகவும், அறிவியல் விஞ்ஞானிகளாகவும், அறிஞர்களாகவும், உயர் நிறுவனங்களின் நிர்வாகிகளாகவும், வழக்குரைஞர்களாகவும், ஆசிரியர்களாகவும், கலை வல்லுநர்களாகவும் என பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
  மேலும், இந்தக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் 14 பேரும், கௌரவ விரிவுரையாளர்கள் 50 பேரும் இந்தக் கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பது கல்லூரிக்குச் சிறப்பாகும்.
  நட்சத்திர அந்தஸ்து: கடந்த 1989-ஆம் ஆண்டில் முதல் தர கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட இந்தக் கல்லூரிக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு தேசிய தர நிர்ணயக்குழுவால்  மூன்று நட்சத்திர அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதே போன்று கடந்த 2006-ஆம் ஆண்டு தேசிய தர மதிப்பீட்டுக்குழு மறு ஆய்வு செய்து பி பிளஸ் தரத்தை வழங்கியுள்ளது.
  பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்பிடம்: இந்தக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெறும் பட்டதாரிகளில் 15 முதல் 20 பேர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று வருகின்றனர்.
  பொன்விழா கொண்டாட்டம்: இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, வரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பொன்விழா கொண்டாடப்படுகிறது.
  முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியில், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் கருத்தரங்கம், பிற்பகலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
  இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பழைய மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, மெல்லிசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
  மாலை நடைபெறும் நிறைவு விழாவில் செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன், கல்லூரிக் கல்வி இயக்குநர் டாக்டர் ஜெ.மஞ்சுளா, வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் டாக்டர் எம்.ஏ.ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai