மாவட்டத்தில் 825 இடங்களில் குடிநீர்த் திட்டப் பணிகள்: அமைச்சர் தகவல்
By DIN | Published on : 28th May 2017 09:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடைகால வறட்சியை சமாளிக்க 825 இடங்களில் குடிநீர்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
ஆரணி தொகுதியில் குண்ணத்தூர், கீழ்நகர், மேல்நகர், 5புத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டப் பணிகள், கிராம சேவை மையக் கட்டடப் பணிகள் உள்பட பல்வேறு திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, புதிதாக போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், சாலைப் பணிகள் உள்பட பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் 825 குடிநீர்த் திட்டப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீதம் அளவுக்கு திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 10 சதவீதப் பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.
ஆரணி தொகுதியில் 87 குடிநீர்த் திட்டப் பணிகள் ரூ.2.5 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. தாய் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.36 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்னை ஏற்படாத வகையில், குடிநீர்த் திட்டப் பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என்றார்.
உடன், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் க.சங்கர், பேரவை நிர்வாகி பாரிபாபு, இளைஞர் பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் திருமால், குண்ணத்தூர் குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.