சுடச்சுட

    

    மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டம்

    By DIN  |   Published on : 28th May 2017 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.ஜோதிமணி முன்னிலை வகித்தார். கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க பொதுச்செயலர் என்.பத்ராசலம், மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி சங்க பொதுச் செயலர் உதயகுமார், செயலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
    கூட்டத்தில், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களை பாதிக்கக்கூடிய வகையில் சென்ற 2016-17ஆம் ஆண்டு முழுவதும் 7 சதவீத வட்டி மானியத்தொகை வழங்கப்படாமல் உள்ளதை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை முழுமையாக தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் கணக்குக்கு மத்திய வங்கி வரவு வைக்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வருங்கால வைப்பு நிதியை எவ்வித நிபந்தனையுமின்றி மத்திய வங்கி வழங்கிட வேண்டும். அதிக அளவில் கடன்கள் வழங்க வேண்டுமென்று குறியீடு நிர்ணயம் செய்துவிட்டு, விவசாயிகளுக்கும், மாற்றுத் திறனாளிக்கும் கடன்கள் வழங்க முடியாதபடி நிபந்தனைகள் விதித்து, 2 விதமான நடைமுறைகளை பின்பற்றச் சொல்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மேலும், செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட கோரிக்கைகளை வரும் ஜூன் 2-ஆம் தேதிக்குள் மண்டல இணைப்பதிவாளர், மேலாண் இயக்குநருக்கு வழங்க வேண்டும். கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து வரும் ஜூன் 20-ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படவில்லை எனில், வரும் ஜூலை 7-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
    இந்த செயற்குழுக் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொருளாளர் எம்.மாசிலாமணி நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai