சுடச்சுட

    

    தொடர் விபத்துகள் நிகழும் புளியரம்பாக்கம் வளைவுச் சாலை!

    By DIN  |   Published on : 29th May 2017 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அருகே தொடர் விபத்துகள் நிகழும் புளியரம்பாக்கம் வளைவு சாலைப் பகுதியை  அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் அமைந்துள்ளது புளியரம்பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தின் அருகே திரைப்படங்களில் வருவது போன்று மிகவும் வளைவான சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலை வழியாகத்தான் காஞ்சிபுரம், சென்னை, திருப்பதி ஆகிய நகரங்களுக்கும், ஆரணி, திருவண்ணாமலை, சேலம் போன்ற பல பகுதிகளுக்கும் அதிகளவில் தனியார், அரசுப் பேருந்துகள், கனரக, இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
    மேலும், சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் செய்யாறு சிப்காட் மற்றும் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சிப்காட் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தனியார் நிறுவன பேருந்துகளும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கல்லூரிப் பேருந்துகளும் இந்த வளைவு சாலை வழியாகச் சென்று வருகின்றன.
    24 மணி நேரமும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் புளியரம்பாக்கம் வளைவுச் சாலை, குறுகிய பாதையாக உள்ளதால், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதில் சிக்கி 10 இளைஞர்கள் வரை உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்து ஊனமுற்ற நிலையில் உள்ளனர்.
    சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை: எனவே, புளியரம்பாக்கம் வளைவுச் சாலையின் இருபக்கத்திலும் அமைந்துள்ள கன்னிநகர் ஏரி, புளியரம்பாக்கம் ஏரி ஆகிய பகுதிகளில் சாலையை விரிவுபடுத்தி, சீரமைத்திட வேண்டும். மேலும், இந்தப் பகுதியில் வாகனங்கள் செல்வதற்கும், வருவதற்கும் தனித்தனியாக சாலைகளை அமைத்து,
    இருவழிச் சாலையாக மாற்றுவதுடன், சாலையின் நடுவே தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.
    முதல்கட்டமாக இந்தப் பகுதியில் வளைவுப் பகுதி தொடங்கும் இடத்திலும், முடியும் இடத்திலும் வளைவான சாலை என்ற அறிவிப்பு சமிக்ஞைகளோடு, வேகத்தடை அமைத்திட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai