சுடச்சுட

    

    ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 30th May 2017 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து வண்டல், சவுடு மண்ணை இலவசமாக எடுத்துச் சென்று பயன்பெற விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப் பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் தங்களது விளை நிலங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    அதன்படி, ஒரு ஏக்கர் நன்செய் நிலம் வைத்துள்ள விவசாயிகள் 25 டிராக்டர் லோடு வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல, ஒரு ஏக்கர் புன்செய் நிலம் வைத்துள்ள விவசாயிகள் 30 டிராக்டர் லோடு வண்டல் மண்ணையும், வீட்டுப் பயன்பாட்டுக்கு 10 டிராக்டர் லோடும், மண்பாண்டத் தொழில் செய்பவர்கள் 20 டிராக்டர் லோடு மண்ணையும் இலவசமாக எடுத்துச் செல்லலாம். விவசாய நிலங்களுக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம். எனவே, வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பெயரில் உள்ள விவசாய நிலங்களின் வகைப்பாடு, பரப்பு, மனுதாரரின் குடியிருப்பு, விளை நிலம் மற்றும் மண் எடுக்க அனுமதி கொரும் ஏரி, குளம் ஒரே வருவாய் கிராமத்திலோ அல்லது அருகே உள்ள வருவாய் கிராமத்துக்குள்ளோ அமையப் பெற்றுள்ளது என்பதற்கான கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றை வழங்க வேண்டும். இத்துடன் நில உரிமை குறித்து கிராம நிர்வாக அலுவலரின் சான்று, அடங்கல் நகலுடன் மாவட்ட ஆட்சியகரத்தில் இயங்கும் இணை இயக்குநர், வேளாண்மைத் துறை மற்றும் உதவி இயக்குநர் புவியியல் - சுரங்கத் துறை அலுவலகத்தில் விவசாயிகள் மனு செய்து பயன் பெறலாம்.
    விண்ணப்பக் கட்டணம் ஏதும் விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்பட மாட்டாது. மனு அளித்த 7 நாள்களுக்குள் மேற்குறிப்பிட்ட அளவீடுகளில் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். அனுமதி பெற்ற விவசாயிகளின் வாகனங்களில் சம்பந்தப்பட்ட பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் மூலமாகவே ஏற்றப்படும்.
    இதற்கு ஏற்றுக் கூலியாக ஒரு டிராக்டர் லோடுக்கு ரூ. 105.60 என்ற விகிதத்தில் கேட்பு வரைவோலையாகவோ, பணமாகவோ பெற்றுக் கொள்ளப்படும். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உடனே விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai