Enable Javscript for better performance
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு: 80 ஆயிரம் குழந்தைகளை சேர்க்க இன்று குலுக்கல்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு: 80 ஆயிரம் குழந்தைகளை சேர்க்க இன்று குலுக்கல்

    By DIN  |   Published on : 31st May 2017 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர 79,842 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
    இவற்றில் இருந்து தகுதியான குழந்தைகளுக்கு நுழைவு நிலையில் சேர்க்கை வழங்குவதற்கான தேர்வு அந்தந்த பள்ளிகளில் புதன்கிழமை குலுக்கல் முறையில் நடைபெறும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளின் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கலாம்.
    இந்தத் திட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க விண்ணபிக்க கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மே 26-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிக்கும் விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பட்டியல் செவ்வாய்க்கிழமை பதிவிறக்கம் செய்யப்பட்டது.
    இந்நிலையில், விண்ணப்பித்துள்ள தகுதியான அனைத்து குழந்தைகளுக்கும் சேர்க்கை வழங்கும் வகையில் புதன்கிழமை அந்தந்த பள்ளிகளுக்கு குழந்தைகளின் பெயர்ப் பட்டியல் வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் பள்ளிகளில் புதன்கிழமை குலுக்கல் முறையில் சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர்.
    குலுக்கல் நேர்மையான முறையில் நடைபெறும் வகையில் கல்வித் துறை அதிகாரி ஒருவரும், மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்பட்டுள்ள பிரதிநிதி ஒருவரும் ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
    சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பெற்றோர், பள்ளி முதல்வர் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும்.
    முதலாவதாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்களான ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளாக உள்ள குழந்தைகளின் தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் இல்லாமல் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படும்.
    மீதமுள்ள இடங்களுக்கு ஒரு கி.மீ. தொலைவுக்குள்ளான இருப்பிடத்தில் வசிக்கும் குழந்தைகளின் விண்ணப்பங்களைக் கொண்டு குலுக்கல் நடத்தப்படும். குலுக்கலுக்குப் பிறகும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் காலியிடம் இருப்பின், 1 கி.மீ. அதிகமான தொலைவில் உள்ள இருப்பிடத்தில் வசிக்கும் குழந்தைகளின் விண்ணப்பங்களைக் கொண்டு குலுக்கல் நடத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் நுழைவு நிலை வகுப்பின் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்கள் வீதம் காத்திருப்புப் பட்டியல் குலுக்கல் முறையில் தயாரிக்கப்படும். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேரவில்லையெனில் காத்திருப்புப் பட்டியலில் இருந்து சேர்க்கை வழங்கப்படும்.
    சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பட்டியல், காத்திருப்பு குழந்தைகளின் பட்டியலில் கல்வித் துறை சார்ந்த பிரதிநிதி, வருவாய்த் துறை சார்ந்த பிரிதிநிதி, பள்ளி முதல்வர், குலுக்கலில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கையொப்பமிட்டு புதன்கிழமை பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்படும்.
    சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு வரும் ஜூன் 5-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும். எனவே, மாணவர் சேர்க்கை வேண்டி விண்ணப்பித்துள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai