சுடச்சுட

  

  பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 4.5 கிலோ கட்டி அகற்றம்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை

  By DIN  |   Published on : 31st May 2017 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 4.5 கிலோ கட்டியை அகற்றி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
  விழுப்புரத்தை அடுத்த விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி உண்ணாமுலை (52). இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமடையவில்லையாம்.
  இதற்காக ஏராளமான பணத்தை செலவழித்து மனமுடைந்த உண்ணாமுலை, கடைசியாக சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார்.
  அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உண்ணாமுலையை உள் நோயாளியாக சேர்த்து தீவிர பரிசோதனைகளை செய்தனர். அப்போது, உண்ணாமுலையின் கர்ப்பப்பையில் 4.5 கிலோ அளவுள்ள கட்டி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தியின் அறிவுரையின்பேரில், மகப்பேறு பிரிவு இணைப் பேராசிரியர்கள் சாந்தி சிவக்குமார், நளினி ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள், உண்ணாமுலையின் கர்பப்பையில் இருந்த கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
  இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: உண்ணாமுலை தனது வயிற்றில் இருப்பது கட்டி எனத் தெரியாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
  இறுதியாக தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, உண்ணாமுலையின் கர்ப்பப்பையில் இருந்த புற்றுநோய் அல்லாத 4.5 கிலோ அளவிலான கட்டி அகற்றப்பட்டது. இதுபோன்ற அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்ய வேண்டுமென்றால் ரூ. ஒரு லட்சம் வரை செலவாகும் என்றார். இதுகுறித்து உண்ணாமுலை கூறுகையில், "ஒன்றரை ஆண்டு பிரச்னைக்கு தற்போதுதான் தீர்வு கிடைத்துள்ளது. அறுவைச் சிகிச்சை செய்தபிறகு வயிறு வலி தெரியவில்லை. நல்ல முன்னேற்றம் தெரிகிறது' என்றார்.
  சிறப்பான முறையில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவக் குழுவை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி பாராட்டினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai