சுடச்சுட

    

    மருந்துக் கடைகள், உணவகங்கள் அடைப்பு: பயணிகள், நோயாளிகள் தவிப்பு

    By DIN  |   Published on : 31st May 2017 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இணையதளம் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து 70 சதவீத மருந்துக் கடைகளும், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்புக்கு (ஜிஎஸ்டி) எதிர்ப்புத் தெரிவித்து 50 சதவீத உணவகங்களும் மூடப்பட்டிருந்தன.
    இதனால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பயணிகள் உணவு கிடைக்காமலும், மருந்துக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் நோயாளிகளும் பாதிக்கப்பட்டனர்.
    நாடு முழுவதும் ஒரே விதமான வரிவிதிப்பை வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இந்தப் புதிய வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக உணவக உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் முழுவதும் உணவகங்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்திலும் தமிழ்நாடு உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் உணவகங்களை மூடி போராட்டத்தில் பங்கேற்றனர்.
    ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக விற்பனையில் ஈடுபடும் உணவகங்களுக்கு தற்போது, முக்கால் சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி முறையில் இது 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    இதேபோல, ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையில் ஈடுபடும் உணவகங்களுக்கு 2 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும், குளிர்சாதன சொகுசு உணவகங்களில் 18 சதவீதமாகவும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இவைகள் வாடிக்கையாளர்கள் மீதே சுமத்தப்படும் என்பதால், மக்கள் பாதிக்கப்படுவர். இதனால், வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழு அடைப்பில் பங்கேற்றுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    இதேபோல, இணையதளம் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து மருந்துக் கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, ஆரணியில் உள்ள சுமார் 50 மருந்துக் கடைகளும், 100-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய உணவகங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல, திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு, செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மருந்துக் கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai