செய்யாறு வட்டம், அத்திக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குடிநீர் வழங்கக் கோரி, காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
அனக்காவூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது அத்திக்குளம் கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடிநீர் இணைப்பு மூலம் வாரத்தில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கை பம்ப் ஆகியவற்றின் மூலம் குடிநீர் தேவையை நிறைவு செய்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லையாம்.
மேலும், பள்ளமாக இருக்கும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் கிடைப்பதாகவும், மேட்டுப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சரியாகக் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. மேட்டுப் பகுதியான ஆஞ்சநேயர் கோயில் தெரு, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனராம். இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை முறையாக விநியோகிக்க வலியறுத்தி, திங்கள்கிழமை செய்யாறு - வந்தவாசி சாலை யூனியன் வங்கி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அனக்காவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அலெக்ஸ், அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
கு.உதயகுமார், பூ.செந்தில்குமாரி ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், குடிநீர் விநியோகம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.