வந்தவாசி அருகே திங்கள்கிழமை சாலைத் தடுப்புச் சுவர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்தனர்.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் வந்தவாசியை அடுத்த மும்முனியில் உள்ள தங்களது குலதெய்வமான ஸ்ரீபச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய திங்கள்கிழமை வேனில் வந்தனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஓட்டினார். வழிபாடு முடிந்த பின்னர், மாலை மீண்டும் வேனில் சென்னைக்குப் புறப்பட்டனர்.
வந்தவாசி புறவழிச் சாலையில் வந்த போது, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சாரதாம்மாள் (70), ராமலட்சுமி (71), வள்ளி (75), ராஜேஸ்வரி (30), மீனாட்சி (24), அனிதா (28), சரசா (45), அருண் (30), ரமேஷ் (24), ரோகித்(13), பரத் (12), சியாம் (1) ஆகிய 12 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.