திருவண்ணாமலை சித்திரை பௌர்ணமி திருவிழாவில் அனுமதி பெற்றே அன்னதானம் வழங்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலையில் வருகிற 29-ஆம் தேதி நடைபெறும் சித்திரை பௌர்ணமி திருவிழாவன்று அன்னதானம் வழங்குவோர் முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

திருவண்ணாமலையில் வருகிற 29-ஆம் தேதி நடைபெறும் சித்திரை பௌர்ணமி திருவிழாவன்று அன்னதானம் வழங்குவோர் முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வருகிற 29-ஆம் தேதி சித்திரை பெளர்ணமி திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை நகரையும், மலை சுற்றும் கிரிவலப் பாதையையும் சுத்தமாகப் பராமரிப்பது நமது கடமை.
குறிப்பாக, மலை சுற்றும் பாதையில் அன்னதானம் வழங்கும் தனி நபர்கள், நிறுவனங்கள் முன் அனுமதி பெறுவது அவசியம். அதன்படி, அன்னதானம் அளிக்க விரும்புவோர் திங்கள்கிழமை (ஏப்ரல் 16) முதல் வரும் 25-ஆம் தேதிக்குள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக 2-ஆவது மாடியில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, உரிய விவரங்களை சமர்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
அன்னதானம் வழங்குவோர், கிரிவலப் பாதையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் உணவு சமைக்கக் கூடாது. அன்னதானம் விநியோகிக்க தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே வழங்க வேண்டும். உணவுப் பொருள்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு உருளைகள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்த அனுமதி இல்லை.
விண்ணப்பிக்க வரும்போது, 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், தங்களது முகவரியைத் தெரிவிக்கும் ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட சான்றின் நகல், எத்தனை நபர்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்ற விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அன்னதானம் வழங்க எந்த இடத்தில், எந்த தேதியில், எந்த நேரத்தில் நிர்ணயிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ, அந்த இடத்தில், அந்த நேரத்துக்குள்ளாக அன்னதானம் வழங்கி முடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது.
அன்னதானம் வழங்க இலையால் ஆன தென்னை, பாக்குமட்டைப் பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகள் மூலம் குடிநீர் விநியோகிக்கக் கூடாது. அன்னதானம் வழங்கும் இடத்திலேயே பக்தர்கள் உணவு சாப்பிட்டுவிட்டு, கழிவுப் பொருள்களை போடுவதற்கு ஏதுவாக குப்பைக் கூடைகளை வைக்க வேண்டும். அந்தக் குப்பைகளை அன்னதானம் வழங்குவோரே கேசரித்து, அப்புறப்படுத்த வேண்டும்.
அன்னதானம் முடிந்தவுடன் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டுச் செல்ல வேண்டும். உரிய அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவோர் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com