குற்றவாளிகளை காவல் நண்பர்கள் கைது செய்யலாம்: மாவட்ட நீதிபதி

குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, காவல் நண்பர்கள், நேரடியாக ஒரு குற்றத்தைக் கண்டறிந்தால், அந்தக் குற்றவாளியை கைது செய்து அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கலாம் என்று மாவட்ட முதன்மை அமர்வு


குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, காவல் நண்பர்கள், நேரடியாக ஒரு குற்றத்தைக் கண்டறிந்தால், அந்தக் குற்றவாளியை கைது செய்து அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கலாம் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி கூறினார்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் பாதுகாப்புப் பணியில் திருவண்ணாமலை மாவட்டக் காவல் துறையுடன் சேர்ந்து மாவட்டக் காவல் நண்பர்கள் குழுவினரும் சேவையாற்றினர்.
இந்தச் சேவையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டக் காவல் நண்பர்கள் குழு சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்பாளரும், தொழிலதிபருமான ஆகாஷ் ஆர்.முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கு.சபரி வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தீபத் திருவிழாவில் சேவையாற்றிய 300 காவல் நண்பர்களைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி பேசியதாவது:
காவல் நண்பர்கள் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியை காவல் துறையுடன் சேர்ந்து சிறப்பாக நடத்தி முடித்துள்ளீர்கள். உங்களை மாவட்ட நீதிமன்றம் சார்பில் பாராட்டுகிறேன்.
காவல் நண்பர்களாக செயல்படும் இளைஞர்கள் குற்றம் செய்யும் நபர்களை கைது செய்யலாமா என்ற கேள்வி இருந்தது. இந்தச் சட்டத்தில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 43 உள்பிரிவு 1 என குறிப்பிட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த பிரிவின்படி, காவல் நண்பர்கள் நேரடியாக ஒரு குற்றத்தை கண்டறிந்தால், அந்தக் குற்றவாளியை நீங்களே பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்றார்.
விழாவில், சார்பு நீதிபதி கே.ராஜ்மோகன், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சி.சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர்கள் ஹூபர்ட் தனசுந்தரம், ஒய்.ஜெயராஜ் சாமுவேல், பி.சேகர், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜி.ஜான்கிங்ஸ்லி, காவல் நண்பர்கள் குழுவின் நிர்வாகிகள் எஸ்.ரவி, ஏ.தியாகராஜ், பி.சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com