சிறுமியைக் கொன்றவருக்கு தூக்கு தண்டனை: திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருவண்ணாமலை அருகே யு.கே.ஜி. மாணவியைக் கடத்திக் கொன்ற வழக்கில், செங்கல் சூளை உரிமையாளருக்கு தூக்கு தண்டனை விதித்து, திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை அருகே யு.கே.ஜி. மாணவியைக் கடத்திக் கொன்ற வழக்கில், செங்கல் சூளை உரிமையாளருக்கு தூக்கு தண்டனை விதித்து, திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
திருவண்ணாமலை வட்டம், மங்கலத்தை அடுத்த மேல்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பரமசிவம். இவரது மனைவி உஷா. இவர்களது மூத்த மகள் பச்சையம்மாள் (4). மங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தார்.
கடந்த 2013, ஜனவரி 13-ஆம் தேதி தனியார் பள்ளி வேனில் பச்சையம்மாள் பள்ளிக்குச் சென்றார். மதிய உணவு இடைவேளையின் போது, அந்தச் சிறுமி காணாமல் போனார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் அளித்தது.
இதையடுத்து, பரமசிவமும், பள்ளி ஆசிரியர்களும் சேர்ந்து சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே, காணாமல்போன தனது மகளைக் கண்டுபிடித்து தருமாறு மங்கலம் காவல் நிலையத்திலும், அப்போதைய மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளேவிடமும் பரமசிவம் புகார் அளித்தார்.
ஆட்சியர் உத்தரவின்பேரில், மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, கடந்த 2013 ஜனவரி 20-ஆம் தேதி மேல்பாலானந்தல் பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் இருந்து சிறுமி பச்சையம்மாள் சடலமாக மீட்கப்பட்டார்.
செங்கல் சூளை உரிமையாளர் கைது: இந்த வழக்கு தொடர்பாக மேல்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளரான பச்சையப்பன் மகன் மணிகண்டனை (28) போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், பணத்துக்காக சிறுமியை மணிகண்டன் கடத்திச் சென்று கொன்றது தெரியவந்தது.
தூக்கு தண்டனை விதிப்பு: இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.மகிழேந்தி,  மாணவியைக் கொலை செய்த குற்றத்துக்காக மணிகண்டனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்ட மகளிர் நீதிமன்ற வரலாற்றில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை.
மாணவியைக் கடத்திய குற்றத்துக்காக மணிகண்டனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com