Enable Javscript for better performance
கேட்பாரின்றி இருந்த முதியவரை பிள்ளைகளிடம் ஒப்படைத்த நீதிபதி!- Dinamani

சுடச்சுட

    

    கேட்பாரின்றி இருந்த முதியவரை பிள்ளைகளிடம் ஒப்படைத்த நீதிபதி!

    By DIN  |   Published on : 09th February 2018 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் கடந்த 21 நாள்களாக போதிய உணவு, உடை இல்லாமல் கேட்பாரின்றி இருந்த முதியவரை அவரது பிள்ளைகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி, அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கினார்.
    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள நிழல்குடையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த சில நாள்களாக கேட்பாரின்றி இருந்தார்.
    இதைக் கவனித்த திருவண்ணாமலை உலக மக்கள் சேவை மையத் தலைவரும், சமூக சேவகருமான பி.மணிமாறன், அந்த முதியவரிடம் விசாரித்தார். அப்போது, தன்னை தன் பிள்ளைகள் சரிவரக் கவனிக்கவில்லை என்றும், தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு கைவிட்டு விட்டதால், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அந்த முதியவர் தெரிவித்தார்.
    இதையடுத்து, முதியவரை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தியிடம் அழைத்துச் சென்ற சமூக சேவகர் பி.மணிமாறன், நீதிபதியிடம் மனு ஒன்றை கொடுக்கச் செய்தார்.
    அந்த மனுவில், தன் பிள்ளைகள் மீது முதியோர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். பின்னர், அந்த முதியவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    இதுகுறித்து, சமூக வலைதளங்கள் மூலம் தகவலறிந்த முதியவரின் பிள்ளைகள் வியாழக்கிழமை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
    அவர்களிடம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி நடத்திய விசாரணையில், முதியவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம், காளியம்மன்பட்டி, அன்பு தெருவைச் சேர்ந்த வஜ்ஜிரவேல் என்பது தெரியவந்தது.
    மேலும், 21 நாள்களுக்கு முன்பு வாலாஜாப்பேட்டைக்குச் சென்று மருத்துவச் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்ற வஜ்ஜிரவேலு, மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.
    இதையடுத்து, காணாமல்போன தந்தையைத் தேடுவதற்காக ராணுவப் பணியில் இருந்து விடுப்பில் வந்திருந்த மகன் ஞானப்பிரகாசம் மற்றும் 2 மகள்களிடம் முதியவரை நீதிபதி ஒப்படைத்தார்.
    அப்போது, முதியவர்களை கனிவுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்று கவனிக்காமல் விட்டால் முதியோர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி மகிழேந்தி எச்சரித்தார்.
    முதியவரை பிள்ளைகளுடன் சேர்க்க உதவியாக இருந்த சமூக சேவகர் மணிமாறனை நீதிபதி பாராட்டினார். பின்னர், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை நீதிபதி சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai