Enable Javscript for better performance
கோப்புகளில் 80 சதவீத அரசு ஊழியர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்துகின்றனர்: மாவட்ட ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    கோப்புகளில் 80 சதவீத அரசு ஊழியர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்துகின்றனர்: மாவட்ட ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 09th February 2018 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் 80 சதவீத அரசு ஊழியர்கள் கோப்புகளில் தமிழ் மொழியைப் பயன்படுத்தி வருவதாகவும், இது அடுத்த ஆண்டு 100 சதவீதமாக உயரும் என்றும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கூறினார்.
    திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 2 நாள் ஆட்சிமொழிக் கருத்தரங்கம், பயிலரங்கம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
    மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் தி.உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் கே.விஜயராகவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிலரங்கை தொடக்கி வைத்து, தமிழ் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகங்கள், சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்குக் கேடயம், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார். விழாவில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது: உலக அளவில் பழைமை, தொன்மைவாய்ந்த மொழி தமிழ் மொழி. நாம் கற்கும் முதல் மொழி தாய்மொழி. தாய் மொழியை எந்த அளவுக்கு நாம் கற்றுக்கொள்கிறோமோ, அதில்தான் நம் முழு வடிவம் தெரியவரும். திருவண்ணாமலை மாவட்ட அரசு அலுவலகங்களில் 80 சதவீதம் பேர் தமிழ் மொழியை கோப்புகளில் பயன்படுத்தி வருகிறோம். அடுத்த ஆண்டு 100 சதவீத இலக்கை நாம் அடைய வேண்டும் என்றார்.
    கேடயம், சான்று அளிப்பு: தொடர்ந்து, தமிழ் ஆட்சிமொழி திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட செய்தி, மக்கள் தொடர்புத் துறைக்கு கேடயம், பாராட்டுச் சான்றை ஆட்சியர் வழங்கினார்.
    மேலும், சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலக உதவியாளர் இரா.தியாகராஜனுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், மாவட்ட செய்தி, மக்கள் தொடர்புத் துறை அலுவலகக் கணக்காளர் கோவிந்தராஜுக்கு இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், அலுவலகங்களுக்குப் பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டன.
    இதைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் ஆட்சிமொழி வரலாறு மற்றும் சட்டம் குறித்து சேலம் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் ப.அன்புச்செழியன், ஓய்வு பெற்ற சென்னை பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் ந.தெய்வசுந்தரம் ஆகியோர் பேசினர்.
    இதில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழ் அறிஞர்கள், அனைத்துத் துறைகளின் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ரூ.15 ஆயிரம் நன்கொடை
    பயிலரங்கில் கலந்து கொண்ட திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்க நிறுவனர் தலைவர் பா.இந்திரராஜன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூ.15 ஆயிரம் நன்கொடையை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கே.விஜயராகவன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோரிடம் வழங்கினார்.
    தனது தாய், அம்மா ஆகியோர் பெறும் ஓய்வூதியத்தில் இருந்து இந்தத் தொகையை வழங்கிய பா.இந்திரராஜனை ஆட்சியர் பாராட்டினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai