Enable Javscript for better performance
செய்யாறில் அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    கிராமப்புற மாணவிகள் அதிகளவில் உயர் கல்வி பயின்று வரும் செய்யாறு பகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
    செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வந்தவாசி, சேத்துப்பட்டு, ஆரணி, பெரணமல்லூர், ஆற்காடு, காஞ்சிபுரம், வாலாஜா, மானாமதி, உத்திரமேரூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.
    இங்கு கல்வி பயின்று வருபவர்களில் அதிகளவில் மாணவிகளே (54 சதவீதம்) படித்து வருகின்றனர். செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், 2006 - 07ஆம் கல்வி ஆண்டில் இருந்து காலை, மாலை என சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    இந்தக் கல்லூரியில் பயின்று வருபவர்களில் இளநிலை வகுப்பில் 50.8 சதவீதத்தினரும்,
    முதுநிலை வகுப்பில் 51 சதவீதத்தினரும், பி.எச்.டி எனப்படும் முனைவர் பட்ட வகுப்பில் 50 சதவீதத்தினரும் மாணவிகள் பயின்று வருகின்றனர். அதிகளவில் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த எஸ்.சி, எஸ்.டி, பி.சி போன்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகள் பயின்று வருகின்றனர்.
    இரு பாலர் பயிலும் கல்லூரியாக செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இருந்து வருவதால், பல்வேறு பிரச்னைகள் நிகழ்ந்திட வாய்ப்புகள் உள்ளன.
    வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மகளிருக்கென வாலாஜாவில் மட்டுமே ஒரேயொரு அரசுக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
    எனவே, உயர் கல்வி பயில விரும்பும் கிராமப்புற மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதியும், பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், பெண் கல்வியை ஊக்குவிக்கவும் கல்வியில் சிறந்து விளங்கி வரும் செய்யாறு பகுதியில் அரசு மகளிர் கல்லூரியை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai