Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைக்கு எதிராக வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வழிச் சாலைக்கு எதிராக வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது

    By DIN  |   Published on : 01st July 2018 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் - சென்னை இடையிலான பசுமை வழிச் சாலைக்கு எதிராக வதந்தி பரப்பியதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் அமையவுள்ள தென் இந்தியாவின் 2-ஆவது பசுமை வழிச் சாலைக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் நிலங்களை அளவீடு செய்து எல்லைக் கற்கள் நடப்பட்டு வருகின்றன.
    சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாயிகளின் நிலத்தை அளந்து எல்லைக் கற்கள் பதிக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டன. தற்போது திருவண்ணாமலையில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கி.மீ. தொலைவுக்கு பசுமை வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த மாவட்டத்தில் அதிகப்படியான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதனிடையே, செங்கத்தை அடுத்த அயோத்தியாபட்டணம், கட்டமடுவு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தங்களின் நிலங்களை அளந்து எல்லைக் கற்கள் பதிக்க விவசாயிகள் எதிர்ப்புத் தெவித்ததால், அந்தப் பகுதிகளில் பசுமை வழிச் சாலைக்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    இந்த நிலையில், பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) ஒன்றிணைய வேண்டும் என முகநூல், கட்செவிஅஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. திருவண்ணாமலையைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் இந்தத் தகவலைப் பரப்புவது தெரியவந்தது.
    இது தொடர்பாக திருவண்ணாமலை பே கோபுரத் தெருவைச் சேர்ந்த விஜயகுமார், திருவண்ணாமலை அருகே உள்ள வேளுகானந்தல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், பவன்குமார் ஆகிய 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை மாலையில் கைது செய்தனர். இவர்கள் மூவரும் பசுமை வழிச் சாலைக்கு எதிராகப் போராட்டத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் தகவலை பரப்பியது உறுதிப்படுத்தப்பட்டது.
    இந்த 3 பேரையும் யாராவது மூளைச் சலவை செய்து சமூக வலைதளங்களில் இது போன்ற தகவல்களைப் பரப்ப தூண்டி விட்டார்களா என திருவண்ணாமலை நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai