Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைத் திட்டம் தேத்துறையில் 6 கி.மீ. தொலைவுக்கு நடப்பட்ட எல்லைக் கற்கள்- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வழிச் சாலைத் திட்டம் தேத்துறையில் 6 கி.மீ. தொலைவுக்கு நடப்பட்ட எல்லைக் கற்கள்

    By DIN  |   Published on : 01st July 2018 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்காக செய்யாறு வட்டம், தேத்துறை கிராமத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 6 கி.மீ. தொலைவுக்கு நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன.
    தேத்துறை கிராமத்தில் சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைக்கான நிலம் அளவிடும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதற்காக வருவாய்த் துறையினர் தேத்துறை கிராமத்தில் பூஜை செய்து நிலத்தை அளந்து எல்லைக் கல் பதித்தனர்.
    வருவாய்த் துறையினர் நிலத்தை அளந்து கொண்டிருந்ததைப் பார்த்த விவசாயி சுரேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் நிலத்தை வாங்கி புதிதாக ரூ.10 லட்சத்தில் கிணறு வெட்டினேன். இன்னும் ஒருமுறைகூட பயிர் வைக்கவில்லை. அதற்குள் நிலத்தில் சாலைக்காக கல் நடுகிறீர்களே என கண் கலங்கினார்.
    அடுத்ததாக, விவசாயி பெருமாள் இறந்துவிட்ட நிலையில், அவரின் மனைவி அஞ்சலை பயிர் செய்து வரும் நிலத்தில் சாலை அமைக்க கல் நடப்பட்டது. இதனைப் பார்த்து அழுத அஞ்சலைக்கு அதிகாரிகள் ஆறுதல் கூறி அங்கிருந்து சென்றனர்.
    தொடர்ந்து, தேத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டிருந்தபோது, நடுவில் நுழைந்து அளந்து கல் நட்டனர். இந்தப் பள்ளியில் கட்டடங்கள், விளையாட்டு மைதானம் ஆகியவை பசுமை வழிச் சாலையால் முற்றிலுமாக பாதிக்கப்படுகின்றன.
    ஆங்காங்கே போராட்டம் நடந்து வரும் நிலையில், தேத்துறை கிராமத்தில் நிலங்களை அளவிடும்போது எவ்வித பணி பாதிப்பு ஏற்படாமல் இருக்க காவல் துணைக் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    விவசாயிகள், பொதுமக்கள் தங்களின் நிலம், வீடு ஆகியவை பசுமை வழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடனேயே அளவிடும் பணியின்போது கூடவே இருந்து பார்வையிட்டனர். பாதிப்பு ஏற்படாத விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.
    மாவட்டத்தின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஒரே நாளில் மிக விரைவாக அளவீடு செய்யப்பட்டு, தேத்துறை கிராமத்தில் இருந்து கிழ்கொளத்தூர் கிராமம் வரை 6 கி.மீ. தொலைவுக்கு எல்லைக் கற்கள் நடப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai