Enable Javscript for better performance
திருவண்ணாமலையில் ஆந்திர சாமியாரின்யாகத்துக்கு நீதிபதி தடை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் ஆந்திர சாமியாரின் யாகத்துக்கு நீதிபதி தடை

    By DIN  |   Published on : 02nd July 2018 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் ஆந்திர சாமியார் நடத்தி வந்த நிர்வாண யாகத்துக்கு தடை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் நிர்வாண யாகம் நடத்திய ஆந்திர சாமியார் உள்பட அவர்களது சீடர்களை அப்புறப்படுத்தினர்.
    திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதை உள்ளது. கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீதிருநேர் அண்ணாமலையார் கோயில் எதிரே உள்ள பகுதிக்கு ஆந்திர மாநிலம், பொக்குல கொண்ட கைலாச ஆஸ்ரம நிர்வாகியான அட்ட யோகிஸ்வரா மவுனி திகம்பரி ஷட்டகோபி கடந்த ஜூன் 25-ஆம் தேதி வந்துள்ளார்.
    பின்னர், திடீரென உலக நன்மைக்காக நிர்வாணமாக 61 நாள்கள் யாகம் நடத்துவதாகக் கூறி, யாகத்தையும் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்த தகவல் பொதுமக்களிடையே பரவியது.
    திருவண்ணாமலை நகரின் பெருமையை ஆந்திர சாமியார் குலைப்பதாக திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு புகார்களும் சென்றன.
    இந்த நிலையில், யாகம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான ஜி.மகிழேந்தி சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, யாகத்தை உடனே நிறுத்த வேண்டும். உடனடியாக இந்த இடத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்று ஆந்திர சாமியாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பான உத்தரவு நகலும் போலீஸாரிடம் வழங்கப்பட்டது.
    இதையடுத்து, நிர்வாண பூஜையில் ஈடுபட்டிருந்த ஆந்திர சாமியார் உள்பட அவர்களது சீடர்களை திருவண்ணாமலை தாலுகா போலீஸார் அந்த இடத்தில் இருந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அப்புறப்படுத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai