Enable Javscript for better performance
திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 புதிய வாக்குச் சாவடிகள்: வரைவுப் பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 புதிய வாக்குச் சாவடிகள்: வரைவுப் பட்டியல் வெளியீடு

    By DIN  |   Published on : 03rd July 2018 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 47 வாக்குச் சாவடிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான வரைவுப் பட்டியலை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டார்.
    தேர்தல் ஆணைய அறிவுரைப்படி, திருவண்ணாமலை மாவட்ட வாக்குச் சாவடிகளில் ஊரகப் பகுதிகளில் 1,200-க்கும் அதிகான வாக்காளர்களைக் கொண்ட வாக்குச் சாவடிகள், நகரப் பகுதிகளில் 1,400-க்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட வாக்குச் சாவடிகளைப் பிரித்து புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
    அதன்படி, புதிதாக 47 வாக்குச் சாவடிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 2,325 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ள 47 வாக்குச் சாவடிகளைப் பிரித்து கூடுதலாக புதிய 47 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 2,372 ஆக உயரும்.
    வரைவுப் பட்டியல் வெளியீடு: இந்த நிலையில், புதிதாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகள் குறித்த வரைவுப் பட்டியலை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டார். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் இந்தப் பட்டியலை அவர் வெளியிட்டார்.
    வரைவுப் பட்டியலை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.ஜானகி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.பானு மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.
    ஜூலை 10-க்குள் மனு அளிக்கலாம்: இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் வாக்குச் சாவடி இருந்தாலோ, வேறு காரணங்களால் வாக்குச் சாவடி அமைவிடத்தை மாற்ற வேண்டியிருந்தாலோ சம்பந்தப்பட்ட வருவாய்க் கோட்ட அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், வாட்டாட்சியர், உதவி வாக்குப் பதிவு அலுவலரிடம் ஜூலை 10-ஆம் தேதிக்குள் மனுக்களை அளிக்கலாம்.
    தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவுப் பட்டியல் திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி வருவாய்க் கோட்ட அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றார் அவர்.
    புதிய வாக்குச்சாவடிகள் விவரம்: செங்கம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் புதிதாக 15 வாக்குச் சாவடிகளும், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் புதிதாக 6 வாக்குச் சாவடிகளும், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிதாக 13 வாக்குச் சாவடிகளும், போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 4 வாக்குச் சாவடிகளும், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியும், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 2 வாக்குச் சாவடிகளும், வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் (தனி) 6 புதிய வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 47 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai