விடாமுயற்சி இருந்தால் மாணவர்கள் சாதிக்கலாம்: எஸ்.பி. ஆர்.பொன்னி
By DIN | Published on : 03rd July 2018 09:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விடாமுயற்சி இருந்தால் மாணவர்கள் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி கூறினார்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாறு சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா மற்றும் அக்டோபர் - 2017, ஏப்ரல் - 2018 வாரியத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி பேசியதாவது:
பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளை சேர்த்தவுடன் பெற்றோரின் கடமை முடிந்து விடாது. பிள்ளைகள் நல்ல நிலைமையை அடையும் வரை உறுதுணையாக உடனிருந்து ஊக்குவிக்க வேண்டும். பிள்ளைகளுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுப்பதைவிட தேவையானதை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள் தங்களது பணியை வேலையாக மட்டும் பார்க்காமல் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். தமது வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் புரியும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். மாணவர்களின் பயத்தைப் போக்குவதுதான் ஆசிரியர்களின் முதல் கடமை ஆகும். மாணவர்களும் ஒழுக்கம், அறிவு, திறமை, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். விடாமுயற்சி இருந்தால் மாணவர்கள் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்றார் அவர்.
விழாவில் கல்லூரி நிர்வாக இயக்குநர் டி.கே.பி.மணி, நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பொறியாளர் கருணாகரன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்திப் பேசினர். முன்னாள் மாணவர்கள் எம்.விக்னேஷ், எஸ்.முரளிதரன், ஜெ.முகமதுயாசர், கே.ஜெயரட்சகன் ஆகியோர் தங்களது பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் கல்லூரித் தலைவர் டி.பெருமாள், தாளாளர் வி.ரகுராம், பொருளாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, செயலர் ஆர்.சுரேஷ், இயக்குநர்கள் எஸ்.ரஷ்யராஜ், எஸ்.வேமன்னா, கல்லூரி முதல்வர் ஆர்.ஹரிஹரன், வந்தவாசி டி.எஸ்.பி. பொற்செழியன், தெள்ளாறு காவல் ஆய்வாளர் அழகுராணி மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரி துறைத் தலைவர் எ.பத்மநாபன் நன்றி கூறினார்.