Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு: நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு: நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

    By DIN  |   Published on : 04th July 2018 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவோடுகளை கையில் ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டாட்சியர் கு.மனோகரன்  தலைமை வகித்தார். 
    வேளாண் உதவி இயக்குநர் ஹரக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
    பிச்சை எடுக்கும் போராட்டம்: இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வழியாக அமைக்கப்படும் பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி பலராமன், மாவட்ட நிர்வாகி வி.சந்திரசேகரன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலர் நார்த்தாம்பூண்டி ஜெ.சிவா உள்ளிட்ட விவசாயிகள் திருவோடுகளை கையில் ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பசுமை வழிச் சாலைக்கு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதால், விவசாயிகள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர். 
    இந்தச் சூழ்நிலையில், 8 வழிச் சாலைக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவினர் சிலர் பேசினர். 
    இதையடுத்து, விவசாயிகளிடையே கடும் வாக்குவாதமும், கூச்சல் - குழப்பமும் ஏற்பட்டது.
    பின்னர், கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறிய விவசாயிகள், திருவோடுகளை கையில் ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு 8 வழிச் சாலை அமைக்கக் கோரி, அதிமுகவினர் சிலர் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    விவசாயிகள் கைது: இதற்கிடையே, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai