Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு: 4 பேர் தற்கொலை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    சென்னை - சேலம் இடையிலான பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாய நிலங்களை அளவீடு செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே செவ்வாய்க்கிழமை விவசாயி கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.
    இதேபோல, சேத்துப்பட்டு பகுதியில் 3 இளைஞர்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
    சென்னை - சேலம் இடையிலான பசுமைச் சாலைத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இந்தச் சாலையானது காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய்த் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
    செய்யாறு வட்டத்தில் பெரும்பாலை, சித்தாமூர், தென்மாவந்தல், முளகிரிப்பட்டு, செங்காடு ஆகிய கிராமங்களில் சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது.
    தென்மாவந்தல் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியின்போது, விவசாயி கிருஷ்ணன் அவரது நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் திடீரென குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அருகில் இருந்த போலீஸார் 4 பேர் கிணற்றில் குதித்து அவரை காப்பாற்றினர். இதேபோல, விவசாயிகள் பலர் தங்களது விவசாய நிலங்களை விட்டுக்கொடுக்க மறுத்தும், பொதுமக்கள் வீடுகளை விட்டுக்கொடுக்க மறுத்தும் நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சேத்துப்பட்டில்...: சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை, பெரணம்பாக்கம், ராந்தம், பெலாசூர், காம்பட்டு வழியாக பசுமை வழிச் சாலை செல்கிறது. இந்ந நிலையில், நில அளவீடு செய்ய ஆத்துரை கிராமத்துக்கு டிஎஸ்பி சின்னராஜ் தலைமையிலான போலீஸார், சேத்துப்பட்டு வட்டாட்சியர் அரிதாஸ் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சென்றனர். அப்போது, தங்களது நிலங்களை அளவீடு செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, ஆத்துரை கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ராதாகிருஷ்ணன் (27), குப்பன் மகன் சுந்தர் (26) ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
    இதேபோல, தாமோதரன் மகன் குணசேகரன் (26) மண்ணெண்ணெய் கேனுடன் வந்து, நிலத்தை அளவீடு செய்தால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார்.
    இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும், அந்த இடத்தில் தகராறில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார், குணசேகரன் உள்பட 7 பேரை போலீஸார் விசாரணைக்காக போளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
    பின்னர் ஆத்துரை, தொழுப்பேடு, தச்சாம்பாடி, கொளக்கரவாடி, நாச்சாபுரம், கரிப்பூர் ஆகிய கிராமங்களில் 15 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைத் துறையினர் அளவீடு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai