பசுமை வழிச் சாலைத் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் மனு
By DIN | Published on : 04th July 2018 07:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சேலம் - சென்னை இடையிலான பசுமை வழிச் சாலைத் திட்டத்தை கைவிடக் கோரி, செங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் செங்கம் வட்டாட்சியர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், சேலம் - சென்னை இடையே அமைக்கப்படும் 8 வழிச் சாலையால் பொதுமக்கள், விவசாயிகள் யாரும் பயன்பெறப்போவதில்லை. இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள், கிணறுகள், மரங்கள் பாதிக்கப்படுகின்றன. செங்கம் வட்டத்தில் மட்டும் 31 கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினர். அப்போது, தற்போது பருவ மழை தொடங்கிவிட்டதால், ஆடி மாதம் விவசாயிகள் நெல் மற்றும் காய்கனிகளை விதைப்பதற்குத் தேவையான விதைகளை செங்கம் பகுதி வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கம் பகுதியில் உள்ள செய்யாற்றின் கால்வாய்களை தூர்வாரவும், முள் புதர்களை அகற்றவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.