Enable Javscript for better performance
மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை: ஆரணியில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை: ஆரணியில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 04th July 2018 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம், ஆரணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பலத்து காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது.
    ஆரணி அருகே அம்மாபாளையம் கூட்டுச்சாலையில் புளிய மரம் சாய்ந்ததால், ஆரணி - வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது திடீரென மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியர் அலுவலகம், கிரிவலப் பாதை உள்பட அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    தொடர்ந்து, நள்ளிரவு 1 மணி வரை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கியது.
    ஆரணியில்...: ஆரணி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செவ்வாய்கிழமை அதிகாலையில் அம்மாபாளையம் கூட்டுச்சாலைப் பகுதியில் உள்ள புளிய மரம் சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்ததால், ஆரணி - வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    இதனால் ஆரணியில் இருந்து வேலூருக்குச் சென்ற பேருந்துகள் அனைத்தும் ஒண்ணுபுரம், கண்ணமங்கலம் வழியாக திருப்பிவிடப்பட்டன. தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர் மரக்கிளைகளை வெட்டி மரத்தை அப்புறப்படுத்தினர். பின்னர், போக்குவரத்து சீரானது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கலசப்பாக்கத்தில் அதிகபட்ச மழை: மாவட்டத்திலேயே அதிகபட்சமாக கலசப்பாக்கம் பகுதியில் 84 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதுதவிர, ஆரணியில் 47.60, செய்யாறில் 62.50, செங்கத்தில் 82.60, சாத்தனூரில் 67.40 மி.மீ., வந்தவாசியில் 43, போளூரில் 42.40, திருவண்ணாமலையில் 65.10, தண்டராம்பட்டில் 26.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai