Enable Javscript for better performance
முதியவரைக் கொன்ற வழக்கு: பெண்ணுக்கு ஆயுள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் மயக்க மருந்து கலந்த டீ கொடுத்து முதியவரைக் கொன்ற வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் சிறைத்
    தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் (80). இவரது மனைவி பார்வதி (70). இவர்கள் இருவரும் கடந்த 2016 அக்டோபர் 21-ஆம் தேதி தண்டராம்பட்டை அடுத்த தேவரடியார்குப்பம் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் செல்வதற்காக திருவண்ணாமலை வந்தனர்.
    திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக அவர்கள் காத்திருந்தபோது, பெண் ஒருவர் எல்லப்பன், பார்வதி ஆகியோரிடம் பேச்சுக் கொடுத்தார். அப்போது, தானும் தேவரடியார்குப்பம் கிராமத்துக்கு தான் செல்கிறேன் என்றும், தன்னுடன் வாருங்கள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன் என்றும் கூறி இருவரையும் ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.
    திருவண்ணாமலை, காந்தி சிலை பகுதியில் சென்றபோது இருவருக்கும் அந்தப் பெண் டீ வாங்கிக் கொடுத்தார். டீ குடித்த சில நிமிடங்களில் இருவரும் மயங்கி விழுந்தனர். சிறிது நேரம் கழித்து விழித்த பார்வதி, தனது கணவர் சுய நினைவின்றி விழுந்து கிடப்பதைப் பார்த்தார். மேலும், தான் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
    இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் எல்லப்பனை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். எனினும், அங்கு எல்லப்பன் இறந்தார். இதன்பிறகே அந்தப் பெண் டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்தது தெரியவந்தது.
    இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், தம்பதிக்கு மயக்க மருந்து கலந்த டீ வாங்கிக் கொடுத்தவர் கடலூர் மாவட்டம், நெய்வேலி, திடீர்குப்பம் கிராமம், புதுஜோதி தெருவைச் சேர்ந்த ராஜவேல் மனைவி சாந்தி (எ) சாராள் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் சாந்தியை கைது செய்தனர்.
    இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஜி.மகிழேந்தி, சாந்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 5 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai