Enable Javscript for better performance
வேன் கவிழ்ந்து விபத்து: போலீஸாரை கண்டித்து பெண் தொழிலாளர்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    வேன் கவிழ்ந்து விபத்து: போலீஸாரை கண்டித்து பெண் தொழிலாளர்கள் மறியல்

    By DIN  |   Published on : 06th July 2018 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே சோதனைக்காக போலீஸார் வேனை நிறுத்தியபோது, சாலையோரப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, போலீஸாரை கண்டித்து பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஆரணியை அடுத்த அரையாளம், தேவிகாபுரம், மேலத்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், ஒழையூரில் உள்ள தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். அந்த நிறுவனம் சார்பில் இயக்கப்படும் வேனில் இவர்கள் வேலைக்கு சென்று வருவர். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வேலை முடிந்து 20-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
    வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, விளாங்காடு கூட்டுச்சாலை அருகே சென்ற போது அங்கு நின்றிருந்த போலீஸார் வேனை நிறுத்தும்படி சைகை செய்தனர். இதனால், வேனை ஓட்டி வந்த உத்திரமேரூரை அடுத்த சேந்தாங்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் வேனை சாலையோரம் நிறுத்தினார். எனினும், வேனின் என்ஜின் இயக்கத்தை நிறுத்தாமல் வேனிலிருந்து இறங்கிய அவர், போலீஸாரை நோக்கிச் சென்றார்.
    அப்போது, திடீரென புறப்பட்ட வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த தேவிகாபுரத்தைச் சேர்ந்த எழிலரசி, மேலத்தாங்கலைச் சேர்ந்த மாலதி, சரஸ்வதி ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    இந்த நிலையில், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேனில் பயணம் செய்த பெண் தொழிலாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது:
    நாங்கள் வந்த வேனை தென்னாங்கூரில் போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சுமார் 3 கி.மீ. தொலைவில் விளாங்காடு கூட்டுச்சாலை அருகே வந்த போது மீண்டும் போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர்.
    இதுபோல, ஆங்காங்கே போலீஸார் நிறுத்தி உள்நோக்கத்துடன் சோதனை செய்வதால்தான் இதுபோன்ற விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    இதனால் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், ஆய்வாளர் கௌரி தலைமையிலான வந்தவாசி வடக்கு போலீஸார் சமரசம் செய்ததை அடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு பெண் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai