Enable Javscript for better performance
செய்யாறு நகராட்சியில் 4 அரசு விழாக்கள்: அமைச்சர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு நகராட்சியில் 4 அரசு விழாக்கள்: அமைச்சர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 08th July 2018 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற 4 அரசு விழாக்களில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்.பி. செஞ்சி சேவல்
    வெ.ஏழுமலை, எம்எல்ஏ தூசி கே.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    திருவத்திபுரம் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணைகள் வழங்கும் விழா, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிர் உரம் வழங்கும் விழா, பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூர் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைத்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன.
    திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாக்களுக்கு செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் தலைமை வகித்தார். ஆரணி தொகுதி எம்.பி. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபு வரவேற்றார்.
    நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 203 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
    பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளின் பங்களிப்புடன் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்காக திருவத்திபுரம் நகராட்சிக்கு 1,428 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
    இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே 155 வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டு, பயனாளிகள் வீடு கட்டும் பணியை மேற்கொண்டுள்ளனர். தற்போது இரண்டாம் கட்டமாக 203 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படுகின்றன. செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகனின் கோரிக்கையை ஏற்று, திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் நிகழாண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வெம்பாக்கம் வட்டம், புன்னை புதுப்பாளையத்தில் உள்ள கோயிலுக்கு ரூ.25 லட்சம் செலவில் திருத்தேர் செய்யவும், கூழமந்தல் ஸ்ரீபேசும்பெருமாள் கோயிலில் ரூ.40 லட்சம் செலவில் பக்தர்கள் தங்கும் அறை கட்டவும் உத்தரவிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
    இதைத் தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதிக்கான காசோலை, பயனாளிகளுக்கு நுண்ணுயிர் உரம் வழங்கியதுடன், பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு அரியலூர் சிமென்ட் ஆலைக்கு சென்ற வாகத்தை கொடியசைத்து அமைச்சர் அனுப்பி வைத்தார்.
    நிகழ்ச்சியில் மாணவரணி மகேந்திரன், சி.துரை, அண்ணா தொழில் சங்கம் அருணகிரி, அவைத் தலைவர் பி.லோகநாதன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.அருளானந்தம், நகரச் செயலர் ஜெனார்த்தனம், கே.வெங்கிடேசன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai