Enable Javscript for better performance
நவீன முறையில் விவசாயம் செய்தால் லாபம் பெறலாம்: மாவட்ட ஆட்சியர் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    நவீன முறையில் விவசாயம் செய்தால் லாபம் பெறலாம்: மாவட்ட ஆட்சியர் பேச்சு

    By DIN  |   Published on : 08th July 2018 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகள் பழைய முறையை கைவிட்டு, நவீன முறையில் விவசாயம் செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கூறினார்.
    திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் இயங்கி வரும் வேளாண் வணிக அலுவலகத்தில் புதுதில்லி சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு மூலம் ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள், வேளாண் இணை இயக்குநர் செல்வராஜ், சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பின் மண்டல மேலாளர் எஸ்.பி.கத்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது:
    திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தைப் பிரதானத் தொழிலாகக் கொண்ட மாவட்டம். பெரும்பாலான விவசாயிகள் மழை, நீர் நிலைகளை நம்பியே விவசாயம் செய்கின்றனர்.
    இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள், மாற்றங்களை விவசாயத்துக்காக ஏற்படுத்தித் தந்துள்ளனர். ஒரு சொட்டு நீரைக் கொண்டு விவசாயம் செய்யும் முறை செயல்பட்டு வருகிறது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் ஒரு தெளிப்பானை வைத்து தண்ணீர் ஊற்றி, விவசாயம் செய்யும் முறையை இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கடைப்பிடித்து, வெற்றியும் கண்டுள்ளன.
    விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்ய மண் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் இன்றும் பழைய முறையில் விவசாயம் செய்கின்றனர். விவசாயிகள் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப நவீன முறையில் விவசாயம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். காலத்துக்கு ஏற்றவாறு விவசாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தால், கண்டிப்பாக விவசாயப் புரட்சி ஏற்படும் என்றார்.
    முகாமில், சிறு விவசாய வேளாண் வணிக கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படும் சமன்பாட்டு நிதித் திட்டம், கடன் உத்திரவாதத் திட்டம், மூலதன நிதியுதவித் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டன. முகாமில், வேளாண் துணை இயக்குநர்கள், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai