Enable Javscript for better performance
குண்ணத்தூரில் ரூ.75 லட்சத்தில் குடிமராமத்துப் பணி: அமைச்சர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    குண்ணத்தூரில் ரூ.75 லட்சத்தில் குடிமராமத்துப் பணி: அமைச்சர் ஆய்வு

    By DIN  |   Published on : 09th July 2018 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் ரூ.75 லட்சம் செலவில் கமண்டல நாகநதியிலிருந்து ஏரிக்குச் செல்லும் கால்வாயில் குடிமராமத்துப் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
    குண்ணத்தூர் அருகே உள்ள கொண்டம் பகுதி கமண்டல நாகநதியிலிருந்து குண்ணத்தூர், இரும்பேடு ஏரிகளுக்கு செல்லும் கால்வாயில் குடிமராமத்துப் பணி ரூ.75 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    தமிழகத்திலுள்ள நீர்வள ஆதாரத் துறை சார்ந்த ஏரிகளை அந்தந்தப் பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் புனரமைக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்தாண்டு கொண்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக, 2017 - 2018ஆம் ஆண்டில் ரூ.328.95 கோடி செலவில் 1,511 ஏரிகளை புனரமைப்பு செய்யும் விதமாக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய பெண்ணையாறு வடிநில கோட்டம் வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 ஏரிகள், 2 அணைக்கட்டுகள், 2 வழங்கு வாய்க்கால்களை புனரமைக்க ரூ.8.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    இந்த நிலையில், படவேடு அருகே உள்ள செண்பகத்தோப்பு அணைக் கதவுகளை புதிதாக அமைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.34 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கே.என்.அணையை சீரமைக்க ரூ.ஒரு கோடி மதிப்பீடு செய்தும் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார். உடன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மணிமோகன், உதவிச் செயற்பொறியாளர் அறிவழகன், உதவிப் பொறியாளர் சிவக்குமார், அரசு வழக்குரைஞர் க.சங்கர், ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வேலு, நகர நிர்வாகி பாரிபாபு, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் திருமலை, குமரன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ரூ.75 லட்சம் செலவில் கண்ணமங்கலம் ஏரிக்கு கால்வாய் அமைக்கும் குடிமராமத்து பணியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பார்வையிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai