Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு: கைதாகி ஜாமீனில் வந்த விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு: கைதாகி ஜாமீனில் வந்த விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 09th July 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் பசுமை வழிச் சாலைக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி சிறைக்குச் சென்று, ஜாமீனில் வந்த 65 விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம் - சென்னை இடையிலான பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பசுமை வழிச் சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, பசுமை வழிச் சாலைக்கான அரசாணை நகலை விவசாயிகள் எரித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
    திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா, திருவண்ணாமலை ரவுண்டானா பகுதிகளில் அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயற்குழு எம்.வீரபத்திரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் வி.சுப்பிரமணி, மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், பசுமை வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களும், வழக்குரைஞர்களுமான எஸ்.அபிராமன், கு.ஜோதி, டி.பிரகாஷ் உள்ளிட்ட 95 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
    சிறையில் அடைப்பு: கைது செய்யப்பட்ட 95 விவசாயிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, வழக்குரைஞர் பாசறை பாபு தலைமையிலான வழக்குரைஞர்கள் திருவண்ணாமலை ஜெ.எம். முதலாவது நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 95 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
    மீண்டும் ஆர்ப்பாட்டம்: ஜாமீனில் வெளியே வந்த விவசாயிகளில் சுமார் 65 பேர் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார்.
    நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்த திருவண்ணாமலை மாவட்டக் காவல் துறையைக் கண்டித்தும், பசுமை வழிச் சாலைத் திட்டத்தை கைவிடக் கோரியும் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai