பெண் தீக்குளிப்பு: கணவர், மாமியார் கைது
By DIN | Published on : 10th July 2018 08:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வந்தவாசி அருகே பெண் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர், மாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
வந்தவாசியை அடுத்துள்ள நகரந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்-பார்வதி தம்பதியரின் மகன் சத்தியநாதன் (32). இவர் மாட்டுத்தரகர். இவரது மனைவி விஜியலட்சுமி(30). இவர்களுக்கு மகள் சசி (9), மகன் ராமு (6) ஆகியோர் உள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை விஜியலட்சுமி தங்களது நிலத்தில் களை பறித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பார்வதியும் வேலை செய்ய வந்தாராம். அப்போது இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு வேலை செய்து கொண்டிருக்கிறேன். நீ இப்போதுதான் வருகிறாயா என்று பார்வதியை விஜியலட்சுமி திட்டினாராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரவு சத்தியநாதன் வீட்டுக்கு வந்தபோது விஜியலட்சுமி மற்றும் பார்வதிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஜியலட்சுமி தன்மீது மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டாராம். இதில் பலத்த காயமடைந்த விஜியலட்சுமி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விஜியலட்சுமி அளித்த புகாரின் பேரில் சத்தியநாதன், பார்வதி ஆகியோர் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸார் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.