Enable Javscript for better performance
திருவண்ணாமலை அருகே 2-ஆம் நந்திவர்மன் ஆட்சிக் கால நடுகல் கண்டெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே 2-ஆம் நந்திவர்மன் ஆட்சிக் கால நடுகல் கண்டெடுப்பு

    By DIN  |   Published on : 11th July 2018 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stone

    காட்டுமலையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 2-ஆம் நந்திவர்மன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த நடுகல்.

    திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தில் 2-ஆம் நந்திவர்மன் ஆட்சிக் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
    வேட்டவலம் பேரூராட்சி, ஆவூரை அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது.
    இந்தப் பள்ளியின் சுற்றுச் சுவருக்குப் பின்னால் பழங்கால நடுகல் இருப்பதை அந்தப் பள்ளியின் ஆசிரியை ஜெயபிரியா பார்த்தார். இதுகுறித்து திருவண்ணாமலை மரபுசார் அமைப்புக்கு அவர் தகவல் அளித்தார்.
    இதையடுத்து, அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர்செல்வம், வரலாற்று ஆர்வலர்கள் மணிகண்டன், மோகன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து ராஜ்பன்னீர்செல்வம் கூறியதாவது:
    4 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட கல்லில் 2 வீரர்களின் உருவம், புடைப்புச் சிற்பமாக 5 வரி கல்வெட்டுடன் நடுகல் காணப்பட்டது. இதை ஆய்வு செய்தபோது கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் 2-ஆம் நந்திவர்மன் (கி.பி. 730 - 795) ஆட்சிக் காலத்திய நடுகல் என்பது தெரியவந்தது.
    போரிலும், ஆநிரை (பசுக்கள், மங்கைகள்) மீட்கும் முயற்சியிலும் உயிரிழக்கும் வீரர்களின் நினைவாக இதுபோன்ற நடுகல் நடப்படுவது அந்தக் கால மக்களின் வழக்கம். இந்த நடுகல் மூலம் அந்தப் பகுதி பல்லவர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது தெரிகிறது. நடுகல் பலகையில் உள்ள வரிகளில் மணியன்னாரம் மகன் இடரன் என்ற பெயர் செதுக்கப்பட்டுள்ளது. எனவே, நடுகல் கல்வெட்டில் இருப்பவர்கள் தந்தை, மகனாக இருக்கலாம். 1,200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊர் மலையனூர் என்று அழைக்கப்பட்டுள்ளது.
    நடுகல்லின் வலது பக்கத்தில் தந்தையைப் போல் உள்ள முதியவரின் உருவமும், இடது பக்கத்தில் மகன் போன்ற தோற்றத்தில் உள்ள வீரரின் உருவமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுகல்லில் உள்ள வரிகளின் கடைசி வரி முற்றிலும் சிதைந்துள்ளது.
    எனவே, 2 வீரர்களின் வீர மரணம் குறித்த முழு தகவலை அறிய இயலவில்லை. நடுகல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கருப்பு, சிவப்பு நிறத்திலான பானை ஓடுகள் அதிகமாக இருப்பதால், இந்த ஊர் மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளதை காண முடிகிறது என்றார் அவர்.
    இதுநாள் வரை இந்தக் கல் பற்றி அறியாத காட்டுமலையனூர், ஆவூர், வேட்டவலம் பகுதி மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த நடுகல்லின் சிறப்புகள் தெரிந்தபிறகு கூட்டம், கூட்டமாகச் சென்று அதைப் பார்த்து வருகின்றனர்.



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai