Enable Javscript for better performance
நுண்ணீர் பாசனத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்று சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நுண்ணீர் பாசனத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்று சிறப்பு முகாம்

    By DIN  |   Published on : 12th July 2018 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனக் கருவிகளை பெறுவதற்கு விண்ணபிக்க அனக்காவூர் வட்டாரத்தில் வியாழக்கிழமை (ஜூலை 12) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழகத்தில் குறைந்த அளவு நீரில் அதிக பயிர் சாகுபடி செய்யும் நோக்கத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம் அரசின் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானிய விலையில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
    அதன்படி, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் சொட்டு நீர் பாசனக் கருவி பெறலாம். மானாவாரி பயிர்களான மணிலா, உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் தெளிப்பு நீர் பாசனக் கருவி பெறலாம். இதன் மூலம் குறைந்த அளவு நீரில் அதிக சாகுபடி, மகசூல் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
    இந்தத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு வருவாய்த் துறையின் மூலம் சிட்டா, அடங்கல், புல வரைபடம், சிறு, குறு விவசாயிச் சான்று போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது.
    இந்த ஆவணங்களைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் புகார்  தெரிவித்தனர். 
    எனவே, நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயலாக்கம் செய்வதில் ஏற்படும் கால தாமதத்தை தடுக்கும் விதமாக, தேவையான அனைத்து வருவாய் ஆவணங்களுக்கும் ஒரே இடத்தில் விண்ணப்பம் அளிக்கும் வகையில், வேளாண்மைத் துறை, வருவாய்த் துறையுடன் இணைந்து கோவிலூர், முளகிரிப்பட்டு, தேத்துறை கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்களை வியாழக்கிழமை நடத்துகிறது.
    இந்த முகாம்களில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனத்துக்குப் பதிவு செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai